வானில் ஒளி மழை.. ஆகஸ்ட் 12 நள்ளிரவு காணலாம்

பெர்சைட் ஒளி மழையை (Perseid Meteor Shower) ஆகஸ்ட் 12 மற்றும் 13ம் தேதிகளில் இந்தியாவில் காணலாம் என்று வானியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பெர்ஸியல் விண்மீன் கூட்டப்பகுதியில் தெரிவதால் இது பெர்சைட் ஒளி மழை என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இந்த வானியல் நிகழ்வு, ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 24க்கு உள்பட்ட காலகட்டத்தில் தெரியும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 11-12 மற்றும் ஆகஸ்ட் 12-13 தேதிகளில் நள்ளிரவில் இந்தியாவில் காண முடியும். குறிப்பாக, ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஒளி மழை பிரகாசமாக தெரிய வாய்ப்புள்ளது.

பெர்சைட் ஒளி மழை என்றால் என்ன?

வால் நட்சத்திரங்களின் வால் பகுதியில் உள்ள பனிக்கட்டி மற்றும் பாறை, தூசு ஆகியவையே வானியல் ஒளி மழையை உருவாக்குகின்றன. ஸ்பிஃப்ட் டட்டில் என்ற வால் நட்சத்திரத்தின் காரணமாக நிகழ்வதே பெர்சைட் ஒளி மழை. வால் நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் வரும்போது அதன் வால் பகுதியில் உள்ள பனி, பாறை, தூசு ஆகியவை உருகி விடுகின்றன.

வால் நட்சத்திரம் நகர்ந்து சென்ற பின்னரும் இவை அந்த சுற்றுப்பாதையிலேயே விடப்படுகின்றன. இவை இருக்கும் இடத்தில் பூமியின் வளிமண்டலம் இடைப்படும்போது ஏற்படும் உராய்வினால் அவை எரிகின்றன. நம் கண்களுக்கு ஒளி மழையாக தெரிகின்றன.

விண்கல் துணுக்குகள் விநாடிக்கு 60 கி.மீ என்ற வேகத்தில் பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழையும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 60 முதல் 100 என்ற எண்ணிக்கையில் இவற்றை காண இயலும். பெரும்பாலும் இந்த விண்கல் துணுக்குகள் எரிந்து போகும்.

எங்கெல்லாம் காண முடியும்?

மேக மூட்டம் இல்லாதிருந்தால் எல்லா இடங்களிலும் வெறும் கண்ணால் இந்த ஒளி மழையை காணலாம். மாசடையாத காற்று மண்டல பகுதியில் மட்டுமே இதைக் காண இயலும். ஆகவே, நகரை விட்டு சில கிலோ மீட்டர் தொலைவு சென்று, காத்திருந்தால் நள்ளிரவில் காணலாம்.

நம் கண்கள் இருட்டுக்குப் பழக ஏறத்தாழ 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். பொறுமையாக காத்திருந்தால் வானிலிருந்து ஒளிக்கீற்றுக்கள் விழுவது தெரியும். இயற்கையின் இந்த இரவு காட்சியை காண தவறாதீர்கள்; நண்பர்களுடன் குழுவாக ஊரை விட்டு வெளியே சென்று அமர்ந்து காண்பது மகிழ்ச்சியான தருணமாக அமையும்.

More News >>