ரயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் ரத்து?
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தி வந்த நிலையில், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், இத்திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தனியாக கட்டணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம், டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் நோக்கில் ரயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வந்தது.
இதன்மூலம், ரயில் விபத்தில் உயிரிழக்கும் பயணிகளின் குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உடல் உறுப்பை இழந்த பயணிகளுக்கு ரூ.7.50 லட்சம், காயமடைந்தால் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை கைவிட ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ரயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் கிடையாது. அதற்கு பதிலாக "பயணிகள் இன்சூரன்ஸ் வசதி தேவை என்றால், ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போதே அதை தேர்வு செய்ய வேண்டும்".
இதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டண விபரம், விரைவில் வெளியிடப்படும். டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, பதிவு கட்டணம் ரத்து செய்யப்படும்” என்று கூறினார்.