வெள்ளாளகுண்டம் அண்ணன்மார் கோவில் திருவிழா!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள வெள்ளாளகுண்டம் கிராமத்தில் அண்ணன்மார் கோயில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
வெள்ளாளகுண்டம் கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன்மார் (பொன்னர்-சங்கர்) கோயில் திருவிழா நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு இந்த திருவிழாவை சிறப்பாக நடத்தினர்.
ஜூலை 31-ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் கொண்டுவந்து பொன்னர், சங்கர், தங்காள் மற்றும் செட்டியண்ணன் ஆகிய சாமிகளை நீராட்டி சுவாமிக்கு பூச்சூட்டி அலங்கரித்து திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது.
அன்று முதல் விரதமிருந்து நாள்தோறும் மாலையில் கோயிலில் மேளதாளம் முழங்க பலவகை அடவுகளுடன் பால மணி நேரம் ஆட்டம் ஆடிவந்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட்டு 7-ஆம் தேதி மக்கள் ஒன்று திரண்டு ஊரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கோயிலில் இருந்து காட்டண்ணன் கோயில் என்று சொல்லப்படும் கோயில் வரையில் பொங்கல் பாணை, சீர் கூடை ஆகியவற்றை சுமந்து சாமியழைத்துச் சென்றனர்.
வழி நெடுக பலர் சாமியாடியபடி சென்று, காட்டண்ணன் கோயிலில் நூற்றுக் கணக்கானோர் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
அங்கு தொப்பாரம் அணிந்து கையில் வேலும் பந்தமும் ஏந்தியவாறு வேட்டையாடும் நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் மேள தாளத்திற்கு ஏற்ப பலர் ஆட்டம் ஆடினர். அவர்களுடன் பெண்களும் சேர்ந்து சாமி ஆடினர், இது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.