கருணாநிதி சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தினார் நடிகர் விஜய்
சர்கார் படிப்பிடிப்பு முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய், மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல், மெரினாவில் அண்ணா சதுக்கம் பின்புறத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராஜாஜி ஹாலில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். இதேபோல், சினிமா பிரபலங்கள் பலர் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் அமெரிக்காவில் சர்கார் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதால், கருணாநிதியின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. இவர் சார்பாக இவரது மனைவி சங்கீதா, நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
சர்கார் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்று அதிகாலை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் கருணாநிதியின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.