ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்

புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கொண்டாடப்பட்டு முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆடிப்பூர திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும், ஆண்டாள்-ரங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இரவில் 16 வண்டி சப்பரத்தில், ஆண்டாள்- ரங்கமன்னார் வீதி உலா வந்தனர்.

5-ஆம் நாள் திருவிழாவில், பெரியாழ்வார் மங்களா சாசனம் வைபமும், 5 கருட சேவையும் நடந்தது. ஏழாம் நாள் விழாவில், ஆண்டாள் திருமடியில், ரங்கமன்னார் சயனத்திருக்கோல வைபவத்தில் காட்சி அளித்தார்.

8-ஆம் திருநாளன்று, மதுரை அழகர்கோயில் கள்ளழகர் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் இருந்து பரிவட்டங்கள் பிரசாதமாக கொண்டு வரப்பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.

9-ஆம் நாளான இன்று, ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் சிறப்பாக நடந்தது. சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள், ஆராதனைக்கு பின்னர் ஆண்டாள், ரங்கமன்னார் திருத்தேரில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து தேரில் இணைக்கப்பட்டிருந்த வடங்களை பக்தர்கள் கோவிந்தா! கோபாலா! என கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் இழுத்தனர்.

ராஜவீதிகளில் ஆண்டாள் கோயில் பெரிய தேர் ஆடி அசைத்து நகர்ந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்தனர். இதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

More News >>