உள்ளாட்சி தேர்தல் வழக்கு... இன்று விசாரணை!
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை ரத்து செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக-வும் மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், 2017-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனை தொடர்ந்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது ஆஜரான, தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்தவுடன், 3 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பபடும் என விளக்கம் அளித்தனர்.
உத்தரவை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்தரப்பு வாதம் செய்தது. இதனிடையே தலைமை நீதிபதியாக இருந்த இந்திராபானர்ஜி உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சுந்தர் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.