குஜராத்தில் கோர விபத்து: கார் பள்ளத்தில் கவிழ்ந்து 7 சிறுவர்கள் பலி
குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டத்தில் உள்ள போடேலி நகரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ஹலோல் நகருக்கு காரில் சென்றனர். இதில், சிறுவர்கள் 7 பேர் உடன் சென்றிருந்தனர். உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, இவர்கள் நேற்று முன்தினம் இரவு காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது, பாத் என்கிற கிராமத்துக்கு அருகே போடேலி - ஹலோல் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில், கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூழ்கியதால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 3 பேரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.