மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகராக கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டார்ஜி (89). கொல்கத்தாவை சேர்ந்த இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் ஆவார். 10 முறை எம்.பியுமாகவும் இருந்தார்.
இந்நிலையில், சோம்நாத் சாட்டர்ஜிக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், இவரை கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.
சோம்நாத் சாட்டர்ஜி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சோம்நாத் சாட்டர்ஜியின் உடல்நிலை மோசமான நிலையில், இன்று காலை 8.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.