சென்னை ராஜாஜி சாலையில் சுதந்திர தின ஒத்திகை
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,சென்னை ராஜாஜி சாலையில், இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழா வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றுகிறார்.
இதனையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை முன்பு பிரமாண்ட மேடை மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகள் முழுவிச்சில் நடைபெற்று வருகின்றன.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலையில் இறுதி கட்ட அணிவகுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், பெண் காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர், கமாண்டோ படை வீரர்கள், தேசிய மாணவர்படை, குதிரைப்படை வீரர்கள் கலந்து கொண்டனர். மிடுக்குடன் காவலர்கள் பீடு நடைபோட்டு சென்ற காட்சி பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருந்தது.
இதன் காரணமாக காலை 6 மணி முதல் 10 மணி வரை நேப்பியர் பாலத்தில் இருந்து போர் நினைவுச்சின்னம் வரையிலும், போர் நினைவுச்சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
நடப்பாண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில், கேரளா சிறப்பு காவல்துறையினர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.