கேரளாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை: அச்சத்தில் மக்கள்
கேரளாவில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என மாநிலமே பேரழிவை சந்தித்துள்ளது. கனமழை எதிரொலியாக, அணைகள் நிரம்பியதை அடுத்து சுமார் 22 அணைகள் திறந்துவிடப்பட்டன.
பல மாவட்டங்கள் வெள்ளக்காடானது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, பல வீடுகள் சேதமடைந்தன. மேலும், கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவம், கடற்படையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
வரலாறு காணாத பேய் மழையை கேரளா மாநிலம் சந்தித்துள்ள நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம் இந்த கடும் மழை மற்றும் நிலச்சரிவால் ரூ.8316 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இதனால், குடியரசுத் தலைவர், அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.