தடையை மீறி காவிரியில் குளியல் - 8 பேர் கைது

திருச்சி காவிரி ஆற்றில் தடையை மீறி குளித்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

அணை முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக திருச்சி காவிரி ஆற்றில், வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

திருச்சி மாநகர பகுதிக்கு உட்பட்ட கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவிரியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்கி யாரும் குளிக்க வேண்டாம் என தண்டோரா மற்றும் விளம்பரப் பலகைகள் மூலம், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காவிரி ஆற்றின் படித்துறையில் தடுப்பு கம்பிகள் அமைத்து அதனுள் குளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதை மீறி தடுப்புக் கம்பிகளின் மேல் ஏறி ஆற்றில் குதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதமாக நீச்சலடித்து குளித்த நபர்களை பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என தெரிகிறது.

தடையை மீறி ஓடத்துறை, தில்லைநாயகம் உள்ளிட்ட படித்துறைகளில் குளித்த 8 பேர் மீது கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், கடந்த இரு வாரங்களில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் இனி வரும் காலங்களில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என அறிக்கை வாயிலாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிவிப்பை மீறி தடுப்புக் கட்டையில் ஏறி குதிப்பவர்கள் மீதுகடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

More News >>