வீடியோவை வெளியிட்டது நம்பிக்கை துரோகம் - இளவரசி மகள் ஆவேசம்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்டு வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ ஒன்றை தகுநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டார். இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ”33 வருடங்களாக ஜெயலலிதாவுடன் இருந்து அவரது சுக துக்கங்களில் பங்கெடுத்த சசிகலாவை கொலைகாரி என்றும், அம்மாவின் கையை எடுத்துவிட்டார், காலை எடுத்தார்கள் என்றும் பலர் பேசினார்கள்.

கொலைகாரி என்ற பழி வந்தபோதுகூட அம்மாவின் கண்ணியத்துக்கு இழுக்கு வரும் என்பதற்காக இந்த வீடியோவை அவர் வெளியிடவில்லை. தற்போது அதனை அவமதிக்கும் வகையில் வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டுள்ளார். சசிகலா அனுமதி இல்லாமல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரிரு மாதங்களில் வீடியோ எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பின்னால் இருக்கும் கருவிகளை அவரால் திரும்பி பார்க்க முடியாததால் அவர் வீடியோ எடுக்கும்படி கூறினார். ஜெயலலிதா கூறியதன் பேரில் சசிகலா தான் வீடியோவை எடுத்தார்.

விசாரணைக் கமிஷன் கேட்டால் கொடுப்பதற்காக அந்த வீடியோவை டிடிவி தினகரனிடம் சசிகலா வழங்கியிருந்தார். அவரிடம் இருந்த வீடியோ வெற்றிவேலுக்கு எப்படி போனது என்பது தெரியவில்லை. இனிதான் தெரியவரும்.

சசிகலாவின் அனுமதி இல்லாமல் இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார். இதுபற்றி தினகரனிடம் இதுவரை பேசவில்லை. ஆனால், வீடியோ வெற்றிவேலிடம் எப்படி சென்றது? என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>