கோவையில் யானைகள் வழித்தடத்தை மீட்க கோரி மனு!
நீலகிரியை போல் கோவையிலும் யானைகள் வழித்தடத்தை மீட்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மலைப்பகுதியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கோவையிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானைகள் வழித்தடத்தை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, மேட்டுபாளையம், மதுக்கரை, போளுவாம்பட்டி, உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
"இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ள தீர்ப்பு மேற்கு தொடர்ச்சி மலையோரம் உள்ள கோவை மாவட்டத்திற்கும் பொருந்தும் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.
“இதே போல் நொய்யல் நீர் வழிப்பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்றி நீர் வழிப்பாதையை பாதுக்காக வேண்டும்” எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.