ஆளுநர் முடிவு எடுக்க முடியாது - முதலமைச்சர் தரப்பு வாதம்
முதலமைச்சரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவு எடுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் தரப்பு வாதம் செய்தது.
18 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்க வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். இன்று மூன்றாவது நாளாக முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார்.
அப்போது அவர், “முதலமைச்சருக்கு சட்டபேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா என ஆளுநர் முடிவெடுக்கும் நிலையை 18 எம்.எல்.ஏக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதன்மூலம், அவர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக விட்டுக் கொடுத்து விட்டதாகவே கருதமுடியும். அதனால் தான், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்”
“முதலமைச்சரை மாற்ற கோரி 18 எம்.எல்.ஏ கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர். ஆனால், முதல்வரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது” என மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார்.
ஆளுநருக்கு அளித்த கடிதம், சபாநாயகர் முன் வைத்த வாதங்கள், இந்த மனுவின் கோரிக்கை என அனைத்திலும் எடியூரப்பா வழக்கையே மனுதாரர்கள் மேற்கோள் காட்டியுள்ளதாக கூறிய மூத்த வழக்கறிஞர், எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகளும் எடுத்துகொள்ளவில்லை என தெளிவுபடுத்தினார்.
அரசியல் விவகாரத்தில் ஆளுநர் தலையிட முடியாது எனவும், ஆளுநருக்கு கடிதம் அளித்தது, ஆளுநரை எதிர்கட்சி தலைவர் சந்தித்தது போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளே தகுதி நீக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முதலமைச்சர் தரப்பு வாதம் முடிவடைந்ததை அடுத்து, அரசு கொறடா தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணையை நீதிபதி சத்தியநாராயணன், நாளைக்கு தள்ளி வைத்தார். அரசு கொறடா தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.