அரசு நிலத்தை ஆக்கிரமித்த சிமென்ட் நிறுவனம்- கொந்தளித்த நீதிமன்றம்
அரியலூரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்த சிமென்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கார்ப்பரேட் நிறுவனங்களின் விதி மீறல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில், அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, ரயில் பாதை அமைத்த சிமென்ட் நிறுவனம், அந்த நிலத்தை பயன்படுத்த அனுமதி கோரி அரசுக்கு விண்ணப்பித்தது.
அத்துடன், அந்த நிலத்திற்கு மாற்றாக வேறு நிலத்தை வழங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிமென்ட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை காலி செய்யுமாறு சிமென்ட் நிறுவனத்திற்கு மாவட்ட உதவி ஆட்சியர் உத்தரவிட்டார்.
சிமென்ட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள நிறுவனத்திற்கு எந்த இரக்கமும் காட்ட முடியாது என்று கூறியதுடன், விதிகளை மீறி, அரசின் அனுமதியை பெற்று விடலாம் என கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதை, நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், அந்த சிமென்ட் நிறுவனம் வழங்க முன்வந்த மாற்று நிலம், அரசு புறம் போக்கு நிலம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிமென்ட் நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்பட்டுள்ளதாகவும், அவர்களின் தொடர்பு குறித்து விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் அந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
சிமென்ட் நிறுவனத்தை அரசு நிலத்தில் இருந்து இரண்டு வாரங்களில் அப்புறப்படுத்தி, 2 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி அரியலூர் உதவி ஆட்சியருக்கு உத்தரவிட்டடார்.