திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம்

சென்னையில், திமுகவின் தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7-ஆம் தேதி காலமானார். அவருடைய உடல் மறுநாளே மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் தலைமை செயற்குழு அவரச கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டார். அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர், அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்பட முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் வாசித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, சென்னை, திருச்சி,கோவை, மதுரை, நெல்லை ஆகிய மாநகரங்களில் கருணாநிதிக்கு வாழ்த்துகூட்டம் நடத்துவது, எப்போது பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது, திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News >>