தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்... விசாரணை சிபிஐக்கு மாற்றம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடந்த மே 22 அன்று பொதுமக்கள் பேரணியாகச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதம் குறித்த பல்வேறு புகார்கள் எழுந்தன. விதிகளை மீறி துப்பாக்கிச் சூடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
“இந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணையை தவிர்த்து தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேர் குடும்பங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி மற்றும் உள்ளூர் காவல்துறை பொதுமக்களை துன்புறுத்துவதை தடுக்க வேண்டும். 242 வழக்குகள் உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். துப்பாக்கி சூடிற்கு காரணமாக அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி 10 பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இந்த வழக்குகளின் இறுதி கட்ட விசாரணை முடிந்ததை தொடர்ந்து, இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் சிடி செல்வம், பஷீர் அகமது அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அத்துடன், 6 பேர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.