தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு... நீதிமன்ற தீர்ப்புக்கு திருமாவளவன் வரவேற்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது எந்த வித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி பொதுமக்கள் 13பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். மற்ற வழக்குகளைப் போல் அல்லாமல் இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போதே அதை மய்யப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழக காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது என வலியுறுத்தினோம். அந்த நியாயமான கோரிக்கையை மதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாகத் தமிழக அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புனையப்பட்ட வழக்குகளையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதுவும் வரவேற்கத்தக்கதே ஆகும். தமிழ்நாட்டிலிருந்து குட்கா முறைகேடு உட்பட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த வழக்குகள் யாவும் இன்னும் விசாரணை மட்டத்திலேயே உள்ளன. அதுபோல காலதாமதம் செய்துவிடாமல் இந்த வழக்கை விரைந்து விசாரித்து நீதிவழங்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

More News >>