ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர்.   சுதந்திரம், குடியரசு தினத்தையொட்டி, மாநில ஆளுநர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அரசு உயர் பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்பார்கள்.    அதன்படி, சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.   விருந்து முடிந்ததும், ஆளுநர் மாளிகையில் உள்ள தோட்டத்தில், முதலமைச்சர், தலைமை நீதிபதி ஆகியோர் ரோஜா செடிகளை நட்டு வைத்தனர். ஆனால், இந்த தேநீர் விருந்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர்.     கடந்த ஞாயிற்றுகிழமை (ஆகஸ்ட்-12ல்) ஆளுநர் மாளிகையில் நடந்த தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவியேற்பு, நிகழ்ச்சியில் நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்வதில் மரபு மீறப்பட்டதாக புகார் எழுந்தது.    அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு பின்னால் நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More News >>