கேரளாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: பிரதமர் மோடி ட்வீட்
கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவையால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த சில நாட்களாக கடும் கனமழை பெய்தது. இதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அணைகள் அனைத்தும் நிரப்பியதை அடுத்து, மதகுகள் திறந்துவிடப்பட்டன.
பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பலர் வீடுகளை இழந்துள்ளனர். இதில், சிக்கி சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் கேரள மக்களின் வாழ்க்கை முடங்கிப்போனது.
மேலும், இடுக்கி, முல்லைப்பெரியாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கொச்சி சர்வதேச விமான நிலையத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், ஓடுபாதை மற்றும் சுற்றுவட்டார இடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. இதையடுத்து, விமான நிலையம் வரும் 18ம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி கேரள மாநிலத்திற்கு உதவி கரம் நீட்டி ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில், “கேரளா மாநிலத்தில் பெய்த எதிர்பாராத கனமழையால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது ” என்றார்.