தனியார் கைக்கு போகும் ஏர் இந்தியா!
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர்இந்தியா விமான நிறுவனம் 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த நிறுவனத்தை லாப பாதைக்குத் திருப்ப அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு பலன் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஏர்இந்தியாவை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக .'ஏர்இந்தியாவில் இனி மத்திய அரசு நிதி முதலீடு செய்யாது செய்யப்பட்ட முதலீடுகள் திரும்ப பெறப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ''முதலீடுகளைத் திரும்ப பெறுவது குறித்து ஆராயத் தனிக் கமிட்டி அமைக்கப்படும். நான் அதற்கு தலைவராக இருப்பேன். உறுப்பினர்களை பிரதமர் முடிவு செய்வார்'' என்றார்.
நிதிய ஆயோக் கமிட்டி ஏர்இந்தியாவில் முதலீடு செய்வதைக் காட்டிலும் சுகாதாரம், கல்வி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என்ற மத்திய அரசுக்கு ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது. தற்போது ஏர்இந்தியாவை டாடா நிறுவனம் வாங்க விரும்புவதாக சொல்லப்படுகிறது. முழுவதுமாகவோ அல்லது 49 சதவிகித ஏர்இந்தியா பங்குகளை டாடா நிறுவனத்துக்கு விற்கப்படலாம். டாடா நிறுவுனர் ஜே.ஆர். டாடா ஏர்இந்தியாவை உருவாக்கியவர்களில் ஒருவர்.