இந்த வீடியோ போதாது இன்னும் வேண்டும் - திருமாவளவன்
இந்த வீடியோவில் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமானால் இந்த காட்சி மட்டுமே போதாது. இன்னும் கூடுதலாக காட்சிப் பதிவுகள் வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள திருமாவளவன், “ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான 20 வினாடி நேரமுள்ள வீடியோ பதிவு ஒன்றை தினகரன் ஆதரவாளர் வெளியிட்டுள்ளார். இது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காகத்தான் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தினகரன் தரப்புக்கு எதிராக தொடர்ந்து நடத்தி வந்த பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் அப்பல்லோ மருத்துவமனை அதிபர் அளித்த பேட்டியில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மிகவும் ஆபத்தான சுயநினைவற்ற நிலையில் இருந்தார் என்று கூறியிருந்தார்.
அப்படி என்றால் இந்த வீடியோ பதிவு அவர் உடல் நலம் தேறிய பின்னர் எடுத்ததாக இருக்க வேண்டும். அது எந்த தேதியில் என்பதை தினகரன் தரப்பினர் தெளிவுப்படுத்த வேண்டும்.
இந்த வீடியோவில் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமானால் இந்த காட்சி மட்டுமே போதாது. இன்னும் கூடுதலாக காட்சிப் பதிவுகள் வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளது.
அப்போதுதான் சசிகலா தரப்பு மீது பொது மக்கள் இடையே எழுந்துள்ள சந்தேகத்தை போக்க முடியும். இந்த தேர்தலில் அவர்களுக்கு ஆதாயம் கிட்டுகிறதோ இல்லையோ? எதிர்கால அரசியலுக்கு சாதகமாக அமையும்.
நாளை வாக்குப்பதிவு நடை பெற உள்ள சூழ்நிலையில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. அத்தீர்ப்பு எந்த நேரத்தில் வெளியிடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எப்போது வெளியிட்டாலும் இந்த இடைத்தேர்தலில் அந்த தீர்ப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று கூறியுள்ளார்.