5 மலை மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வுமையம்
நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை உள்பட 5 மலை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தை உலுக்கி எடுக்கும் கனமழை, அதையொட்டியுள்ள தமிழக பகுதியான கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் மழையால், நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் ரோடுகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய 5 மலை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் சென்னையை பொறுத்த வரை மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முல்லைப்பெரியாறு அணை 142 அடி எட்டியதை தொடர்ந்து 139 அடியாக குறைப்பதற்கான நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.