விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்து பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த கல்வியாண்டில் நடந்த முடிந்த 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்கள் பெயர் பட்டியலை தேர்வுத்துறை தயாரித்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரியர்கள மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்த பள்ளி கல்வித்துறை விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியது.
அவர்களுள், 70 சதவீதம் ஆசிரியர்கள் விளக்கம் அளித்துவிட்டதாகவும், எஞ்சிய 30 சதவீதம் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் அந்த ஆசிரியர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.