அணுகுண்டுக்கு பதில் அணுகுண்டுதான், வேறு எதுவுமில்லை - வலிமை மிக்க வாஜ்பாய்
By SAM ASIR
1957ம் ஆண்டு! இந்தியாவின் இரண்டாவது பொது தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து மக்களைவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அந்த 33 வயது வாலிபர்.
பாரதிய ஜன சங்கத்தின் உறுப்பினர் அவர். இந்திய விடுதலை போராட்டத்தில் சிறை சென்ற அனுபவம் கொண்ட அந்த வாலிபர், நாடாளுமன்றத்தில் அப்போதைய பாரத பிரதமரான ஜவஹர்லால் நேருவுடன் பல்வேறு கருத்து மோதல்களை நிகழ்த்தியவர்.
நேரு மறைந்தபோது, "நமது குடியரசு மென்மேலும் சிறக்க ஒருமைப்பாடு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையுடன் பாடுபடவேண்டும். தலைவர் மறைந்து விட்டார். ஆனால், சீடர்கள் இருக்கிறோம். ஆதவன் மறைந்து விட்டார். ஆனாலும் மின்னும் நட்சத்திரங்களின் ஒளியிலே நம்முடைய பாதையை கண்டுபிடிக்க வேண்டும். இது நமக்கு பரீட்சையின் காலம். இந்த காலத்தில் அவரது உன்னத குறிக்கோளை அடைய நம்மை அர்ப்பணிப்போம். அதன் மூலம் இந்தியா வலிமைமிக்கதாக, திறன்மிக்கதாக, செழிப்பானதாக வளர்ந்தோங்கும்," என்று உரையாற்றினார். ஆம், அவர் கட்சிகளை கடந்து நாட்டின் முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்டவர்.
மத்திய பிரதேசத்தில் குவாலியரை சேர்ந்த பள்ளி ஆசிரியரான கிருஷ்ண பிஹாரி வாஜ்பாயின் மகனான அந்த வாலிபர்தான் பிற்காலத்தில் பாரத பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய், தற்போது லக்ஷ்மிபாய் கல்லூரி என்று அழைக்கப்படும் அப்போதைய விக்டோரியா கல்லூரி மற்றும் கான்பூரிலுள்ள டி.ஏ.வி கல்லூரி ஆகியவற்றில் பயின்று அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். ஹிந்தி மொழியில் சரளமாக பேசக்கூடிய திறமை படைத்தவர்.
தம்மை பத்திரிகையாளராகவும், சமுதாய சேவகராகவும் அடையாளப்படுத்திக் கொண்ட அவர், சுதேசி, வீர அர்ஜூன் ஆகிய நாளிதழ்கள், பஞ்சஜன்யா என்ற வார இதழ் மற்றும் ராஷ்டிரிய தர்மா என்ற மாத இதழுக்கும் ஆசிரியராக இருந்துள்ளார்.
இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது 1975 - 77 ஆகிய இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தார். அப்போது அவர் எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளி வந்துள்ளன. ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து, பல்கேரியா, குவைத் உள்பட பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
1957, 1967, 1971, 1977, 1980, 1991, 1996, 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வாஜ்பாய், பத்து முறை மக்களவைக்கும் 1962 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் ராஜ்யசபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு துறை அமைச்சர், பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர், மக்களவை எதிர் கட்சி தலைவர் என்ற பொறுப்புகளோடு பல்வேறு பாராளுமன்ற குழுக்களிலும் அங்கம் வகித்தவர். 1996, 1998 - 99, 1999 - 2004 ஆகிய காலகட்டங்களில் பாரத பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.
பத்ம விபூஷண், பாரத் ரத்னா ஆகிய விருதுகளை பெற்றவர் வாஜ்பாய். 1994ம் ஆண்டுக்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது பெற்றவர் அவர். கான்பூர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டமும் இவருக்கு வழங்கியுள்ளது.
சீனா, அணுகுண்டு சோதனை செய்தபோது, "அணுகுண்டுக்கு பதில் அணுகுண்டுதான், வேறு எதுவுமில்லை," என்று 1964ம் ஆண்டிலேயே ராஜ்யசபாவில் பேசிய வாஜ்பாய், 24 ஆண்டுகள் கழித்து தாம் பிரதமராக இருந்தபோது, 1998ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, இந்தியாவை வல்லரசு பாதையில் வழிநடத்தியவர்.
1924ம் ஆண்டு டிசம்பர் 25 பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், பெருமைமிக்க வாழ்க்கை நடத்தி, 2018 ஆகஸ்ட் 16ம் தேதி, 93 வயது நிறைவடைந்தவராக மறைந்துள்ளார். அவரது பணிகள் எந்நாளும் நினைவுகூரப்படும்.
(தொகுக்கப்பெற்றது)