இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கனமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பின. இதனை தொடர்ந்து அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு வரும் காவிரி நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது.    10 ஆண்டுகளுக்கு பிறகு, கர்நாடகா அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூரும் அதன் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அந்த நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அது திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு வந்ததையடுத்து அங்கிருந்து கல்லணை மற்றும் கொள்ளிடத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.    இன்றைய நிலவரப்படி 2 லட்சம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்தோடுகிறது. இதனால் திருச்சியில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைய கொள்ளிடம் இரும்பு பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டது.  நேரம் செல்ல செல்ல தூணில் ஏற்பட்ட விரிசல் அதிகரித்துள்ளது. இதையடுத்து கொள்ளிடம் பழைய பாலத்தின் வழியாக போக்குவரத்தை தடை செய்தனர். அந்த பாதையில் தடுப்பு அமைக்கப்பட்டது.   பழைய பாலத்தில் ஏற்பட்ட விரிசலை பார்வையிட்ட அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் அந்த பகுதியில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய பாலம் இடிந்து விழுந்தாலும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் இதனால் புதிய பாலத்திற்கு எந்தவித பாதிப்பு இல்லை என்றும் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், மாவட்ட ஆட்சியரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
More News >>