கேரளாவில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் பெய்துவரும் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலம் முழுவதும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தொடர் மழையால் கேரள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 167-பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், “கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கின்றது. கேரள மாநிலத்ன் மீது கடந்த 2 நாட்களாக எந்த மேலடுக்கு சுழற்சியும் இல்லை.
வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும். அதன் பிறகு கேரளாவில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அத்துடன், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மீனவர்கள் தென்மேற்கு அரபிக் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.