பேருந்து கண்ணாடி உடைப்பு.. பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது
By Radha
ஆம்பூரில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்ததாகக் கூறி பா.ஜ.க நகர தலைவர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ஆம்பூர் நோக்கி அரசுபேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஆம்பூரில் மறைந்திருந்த, மர்ம நபர்கள் அரசு பேருந்து கல்வீசி அரசு பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளனர்.
பேருந்து ஓட்டுனர் சின்னத்தம்பி ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஆம்பூர் பாஜக நகர தலைவர் அண்ணாதுரை, துணைத் தலைவர் சுரேந்தர், கமல் ஆகிய 3 பேர் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு திரண்ட பா.ஜ.கவினர் 100க்கும் மேற்பட்டோர், 3 பேரை விடுவிக்கக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
பின்னர் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த பாஜகவினர் மூன்று பேர் மீதும் பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.