வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
உடல்நலக் குறைவால் நேற்று மாலை மறைணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.
முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (93) நேற்று மாலை காலமானார். இவரது உடல் நேற்று இரவு டெல்லி கிருஷ்ண மேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இவரது உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி உள்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், காலை 10 மணியளவில் வாஜ்பாயின் உடல் அவரது வீட்டில் இருந்து டெல்லி தீன்தயால் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
இந்த ஊர்வலம், தீன் தயாள் உபாத்யாய் மார்க், பகதூர் ஷா ஜபார் மார்க், டெல்லி கேட், நேதாஜி சுபாஷ் மார்க், சாந்தி வேன் வழியாக, ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தில் இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்பிறகு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.