கருணாநிதி நினைவிடத்திற்காக மெரினாவில் 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் அமைப்பதற்காக, மெரினா கடற்கரையில் 1.72 ஏக்கர் இடம் ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய திமுக சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி மறுத்தது.
இதையடுத்து, திமுகவினர் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்த வழக்கு இரவோடு இரவான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மெரினாவில் ஜெயலலிதாவை அடக்கம் செய்யப்பட்ட நிலம் மீது ஐந்து வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதனால், வழக்கில் இருக்கும் ஒரு இடத்தை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு மறுத்தது.
மேலும், முன்னாள் முதல்வர் காமராஜர் பதவி காலத்தில் இல்லாதபோது மரணமடைந்த காரணத்தால் அவரருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய அப்போதைய திமுக இடம் வழங்கவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் முன்னாள் முதல்வருக்கு எப்படி இடம் வழங்க முடியும் என்று தனது வாதத்தை முன் வைத்தது.
இதனால், வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்ட நிலையில், மெரினாவில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, மெரினாவில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்க மெரினாவில் 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.