டுவிட்டருக்கு பாகிஸ்தானில் தடை?

ஆட்சேபகரமான கருத்துகளை தடை செய்வது குறித்து பாகிஸ்தானின் வழிகாட்டலை பின்பற்றாததால் அங்கு டுவிட்டர் தடை செய்யப்படலாம் என்று பாகிஸ்தானின் தொலைதொடர்பு ஆணையம் (Pak­istan Telecommuni­cation Authority - PTA) தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தரக்குறைவான, ஆட்சேபகரமான கருத்துகள் மீது பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளை குறித்து விளக்குவதற்காக நடந்த செயலக கூட்டத்தில் பாகிஸ்தானின் இணைய கொள்கை மற்றும் வலைத்தள கண்காணிப்பு தலைமை இயக்குநர் நிஸார் அகமது இதை தெரிவித்தார்.

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், டுவிட்டர் நிறுவனம் பாகிஸ்தானின் வழிகாட்டலுக்கு உரிய பதில் அளிக்காவிட்டால், பாகிஸ்தானில் அது தடை செய்யப்படும் என்று உரிய விதத்தில் தெரிவிக்குமாறு தொலைதொடர்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டிருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை தெரிவித்தும் டுவிட்டர் நிறுவனம் இன்னும் பதில் தரவில்லை என்றும் கூறிய நிஸார் அகமது, "இறுதி அறிவிக்கைக்கும் டுவிட்டர் பதில் தராவிட்டால், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்," என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்படுவது புதிதல்ல. 2008ம் ஆண்டில் இருமுறை மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஃபேஸ்புக்கும், 2012 செப்டம்பர் முதல் இரண்டு ஆண்டு காலத்திற்கு யூடியூப்பும் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தன.

தற்போது ஃபேஸ்புக், யூடியூப் ஆகியவை அரசின் வழிகாட்டலின்படி செயல்படும்போது, டுவிட்டருக்கு வைக்கப்படும் கோரிக்கைகளில் 5 சதவீதத்தையே அது ஏற்றுக்கொள்கிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியின் (Tehreek-i-Insaf) தகவல் துறை செயலாளர் ஃபாவத் சௌத்ரி, இது குறித்து, "ஆட்சேபகரமான, பாதிக்கக்கூடிய கருத்துகளை விரும்பாதவர்கள் அவற்றை தேடக்கூடாது. சமூக ஊடகங்கள் வெறுமனே பொழுதுபோக்குக்கு மட்டும் உரியவை அல்ல. இதன் மூலமான வணிகம் எத்தனையோ வேலைவாய்ப்புகளை தருகிறது.

அதை நம்பி குடும்பங்கள் உள்ளன. சமூக ஊடகங்களை தடை செய்வது சமுதாயத்தில் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் பாதிப்புகளை உருவாக்கும்," என்று கருத்து தெரிவித்துள்ளார். ஃபாவத் சௌத்ரி, பாகிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசில் தகவல் துறை அமைச்சராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News >>