நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்பட ஐந்து மலை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுக்குறைந்து மேற்கு மத்திய பிரதேசம் அருகே குறைந்த காற்றழுத்த பகுதியாக நிலவி வருகிறது. இதன் காரணமாக வங்ககடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவமழை தாக்கத்தின் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மலை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 11 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.மேலும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 10 சென்டிமீட்டர் மழையும், வால்பாறையில் தாலுக்கா ஆபிஸ் பகுதிகளில் தலா 8 சென்டிமீட்டர், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு,தேனி பெரியார் உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.