ஆசிய விளையாட்டுப் போட்டி... இந்தியாவுக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும்

18வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. தலைநகர் ஜகார்தாவில் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெற்றது. 45 நாடுகளிலிருந்து 58 விளையாட்டுகளில் ஏறக்குறைய 10,000 வீரர், வீராங்கனைகள் பங்கு பெறுகின்றனர்.

சுஷில்குமார் தோல்வி

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான மல்யுத்த வீரர் சுஷில்குமார் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார். ஒலிம்பிக் பதக்க வீரரான சுஷில், ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சுஷில்குமார், 2008 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும் 2012 ஒலிம்பிக்கில் வெள்ளியும் வென்றுள்ளார். 74 கிலோ பிரிவில் ஞாயிற்றுக்கிழமை களம் கண்ட அவர், பஹ்ரைனின் ஆடம் பட்டிரோவிடம் 3 - 5 என்ற புள்ளி அடிப்படையில் தோல்வி அடைந்தார்.

துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம்

கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா, ரவிகுமார் இணை 429.9 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தை பிடித்து, வெண்கலம் வென்று ஆறுதல் தந்துள்ளது.

அதேவேளையில் துப்பாக்கிச் சுடுதல் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர், அபிஷேக் வர்மா ஜோடி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.

தங்கம் வென்ற பஜ்ரங்

65 கிலோ பிரீ ஸ்டைல் பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா ஜப்பானின் டைச்சி டேகாட்டனியை வென்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். 11 - 8 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிக்கனியை தட்டிப் பறித்த புனியாவின் தங்கப்பதக்கம், ஆசிய போட்டிகளில் இந்தியா பெறும் 140 தங்கமாகும். ஆறு மாதங்களுக்கு முன் ஆசிய சாம்பியன் போட்டியின் அரையிறுதியில் டேகாட்டனியிடம் தோல்வியை தழுவிய பஜ்ரங், இந்தப் போட்டியில் பழி தீர்த்துள்ளார்.

More News >>