2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை

புதுடெல்லி: ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரைம் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2004 & 2009 மற்றும் 2009 & 2014ம் ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.

இதனால், கடந்த 2011ம் ஆண்டு, திமுக கட்சியை சேர்ந்த மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் ஷாகித் பால்வார் உள்ளிட்ட 14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து, இதன் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சுமார் 6 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு எழுதும் பணி தாமதமானதால் தீர்ப்பு தேதி ஒத்திவைப்பட்டது. இதன் பின்னர், தீர்ப்பு டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்.

இந்நிலையில், 2ஜி வழக்கு இன்று காலை 10.30 மணி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஒ.பி.சைனி முன்னிலையில் வந்தது. அப்போது, மனுதாரர் சுப்ரமணிய சுவாமி, குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

நாடே எதிர்பார்த்த 2ஜி வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஓ.பி.ஷைனி காலை 10.50 மணிக்கு வாசிக்க தொடங்கினார். அதில், 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிடப்படுகிறது என கூறினார். சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பிஐ தவறிவிட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

More News >>