சிதம்பரம் அருகே வெள்ளத்தில் தத்தளிக்கும் 20 கிராமங்கள்
By Radha
சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தத்தளிக்கின்றன.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு வழியாக கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்து செல்கிறது. கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கரையோரமுள்ள பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், பெருக்காள், வீரன் கோவில் திட்டு, பெரிய காரமேடு, சின்ன காரமேடு உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்துள்ளது. 5 நாட்களாகியும் தண்ணீர் வடியாததால் மக்கள் மண்டபம், சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளநீர் வடியாததால் அப்பகுதிகள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீரில் மூழ்கி பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. சில வீடுகள் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. ஆனால், இதுவரை ஒரு அதிகாரிகள் கூட வரவில்லை என வீரன்கோவில் கிராமமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நிவாரண முகாம்களில் போதிய அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உடைமைகளை இழந்து நிற்கதி நிலையில் தவிக்கும் தங்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.