வெளிநாடு சொத்துகளை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, மருமகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள், முதலீடுகளை மறைத்ததாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் மீது வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்தது.
சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நீதிபதி மலர்விழி முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுபடி நளினி சிதம்பரம், ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் ஆஜராகினர்.
வெளிநாடு சென்றிருப்பதால் ஆஜராக முடியவில்லை எனவும், ஒரு நாள் விலக்கு அளிக்க கோரியும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதனை ஏற்ற நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து அன்றைய தினம் ஆஜராக உத்தரவிட்டார்.
மேலும் வழ்க்கு தொடர்பான ஆவணங்களை இன்று ஆஜரான இருவருக்கும் வழங்கவும், கார்த்தி சிதம்பரத்துக்கு செப்டம்பர் 3ஆம் தேதி ஆஜராகும்போது வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.