வைகையில் நீர் திறப்பு: கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
By Radha
வைகை அணை நிரம்பியதை அடுத்து, பாசன வசதிக்காக அணையில் இருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அங்கிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டதால், வைகை அணை அதிகவேகமாக நிரம்பியது.
முழுக்கொள்ளளவான 71 அடியில் 68 அடி நீர் நிரம்பியது. இதனை தொடர்ந்து பாசன வசதிக்காக வைகையில் இருந்து நீர் திறக்க மதுரை, சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்ற அரசு, ஆகஸ்ட் 20 முதல் தண்ணீர் திறக்கப்படும் என உத்தரவிட்டது. இன்றைய தினம், வைகை அணையில் இருந்து பாசன வசதிக்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார். மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன்மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 1 லட்சத்து 5,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வைகை அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து கரையோரம் உள்ள கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் எனவும் ஆற்றின் அருகே கால்நடைகளின் மேய்ச்சலை தவிர்க்கவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.