தமிழக காவல்துறை ஐஜி ஒருவர் மீது பெண் எஸ்பி அளித்த பாலியல் புகார் குறித்து, விசாகா கமிட்டி கூடுதல் டி ஜி.பி சீமா அகர்வால் விசாரிக்க உள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் மற்றும் நீதிமன்றங்களும் பல்வேறு கடுமையான உத்தரவுகளை அமல்படுத்தி வருகின்றன.
பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விஷாகா குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2013ஆம் ஆண்டு மத்திய அரசு சட்டமியற்றியது. இதன்படி தமிழக காவல்துறையிலும் விசாக கமிட்டி அமைக்கப்பட்டது.
ஏற்கனவே இருந்த கமிட்டியின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற நிலையில் கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது
இந்த குழுவில் , கூடுதல் டி.ஜி.பி அருணாசலம், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி தேன்மொழி, ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரஸ்வதி, டி.ஜி.பி அலுவலக சீனியர் நிர்வாக அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த கமிட்டி அமைக்கப்பட்ட ஒரே நாளில், பெண் எஸ்.பி ஒருவர், காவல் துறை ஐ.ஜி ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை சீமா அகர்வால் தலைமையிலான குழு முதல் புகாராக ஏற்று, விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.