கேரள பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு
By Radha
மழை வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியதால் வெள்ளம், மண்சரிவு ஏற்பட்டு கேரள மாநிலம் நிலைக்குலைந்து நிற்கிறது. இதுவரை 357ம பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி, டெல்லி அரசு சார்பில் ரூ.10 கோடி, தெலுங்கானா அரசு சார்பில் ரூ.25 கோடி, பீகார் அரசு சார்பில் ரூ.10 கோடி, அரியானா அரசு சார்பாக ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசு சார்பாக சார்பில் ரூ.20 கோடி, குஜராத் அரசு சார்பாக ரூ.10 கோடி, உத்தரப்பிரதேசம் மாநில அரசு சார்பாக ரூ.15 கோடி, பஞ்சாப் அரசு சார்பில் ரூ.10 கோடி, ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி, மத்தியப்பிரதேசம் அரசு சார்பில் ரூ.10 கோடி ரூபாய் என நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பல மாநிலங்களை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தனது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
கேரளாவில் ஏற்பட்ட பெருஞ்சேதங்களை இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தி இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும்பாதிப்பை அதிதீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.