ஸ்டெர்லைட் ஆய்வில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு - பசுமை தீர்ப்பாயம்
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தமிழக அரசு, துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பித்தது. அதை எதிர்த்து, ஆலையின் உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதாகவும், ஆலை உற்பத்தியால் மாசு உண்டாவதாக கூறப்படும் வாதத்தை ஆராய, குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.’
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று தமிழக அரசு வாதிட்டது. ஆனால், தமிழக அரசின் வாதத்தை, தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்ததோடு, "ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்" என்ற, வேதாந்தாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றது.
இந்த விசாரணை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி, ஏ.கே.கோயல் தலைமையில், கடந்த வாரம் நடந்தது. அப்போது, ‘ஊழியர்கள்சம்பளம் உட்பட பல்வேறு நிர்வாக பணிகளை கவனிக்க வேண்டி இருப்பதால், ஆலையை, 30 நாட்களுக்கு திறக்க அனுமதிக்க வேண்டும்' என்று, வேதாந்தா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு, தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 'ஆலையை திறக்க அனுமதி அளித்தால், விதிமீறல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை, வேதாந்தா நிறுவனம் அழித்துவிடக் கூடும்' என, அரசு சார்பில் வாதிடப்பட்டது.
நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும், ஆலையை திறக்க, நீதிபதி அனுமதி அளித்தார். ஆலையில் உற்பத்தி நடக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், “துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில், மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும். மேலும், இந்த குழு, ஆறு வாரங்களுக்குள் தங்கள் ஆய்வு பணிகளை முடித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்”. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி உத்தரவிட்டார்.