கமல்ஹாசன் வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இவரது வீட்டின் ஒரு பகுதியில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதனால், கமல்ஹாசனை சந்திக்க கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு வந்து செல்வார்கள். இந்நிலையில், கமலின் வீட்டில் இன்று அதிகாலையில் வாலிபர் ஒருவர் அத்துமீறி சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் செல்ல முயன்றுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் காவலாளி அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், புரசைவாக்கம், ராஜா அண்ணாமலை சாலை பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் மலைச்சாமி என்பது தெரியவந்தது. இவர், தீவிர கமல் ரசிகர் என்றும், கமலை பார்க்கவே வீட்டிற்குள் குதித்தேன் என்றும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கமல் நியூயார்க் சென்றுள்ள நிலையில் வாலிபர் வீட்டிற்குள் குதித்ததற்கான காரணம் குறிதது போலீசார் அவரை சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கமல் வீட்டிற்குள் இதேபோல் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு வாலிபர் நுழைந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.