கேரள வெள்ளம்... தமிழக அரசுக்கு தமிழிசை அறிவுரை
கேரளா மழை வெள்ளத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு நீர் மேலாண்மையை தமிழக அரசு கடைப்பிடிக்க வேண்டும் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.
கோவை குனியமுத்தூரில், இந்து முன்னணி மற்றும் பாஜக கட்சி கொடிகள் கம்பத்தில் இருந்து கழற்றி மர்மநபர்கள் கால்வாயில் வீசி சென்றனர். இது குறித்து கோவை குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தை பாஜக மாநிலதலைவர் தமிழிசை நேரில் பார்வையிட்டார். பின்னர் பேசிய தமிழிசை, தமிழக அரசு கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர இன்னமும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்று கூறி வருகிறது அதற்கு முக்கிய காரணம் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாமல் இருப்பதுதான்" என குற்றம்சாட்டினார்.
"அதை முறையாக செய்திருந்தால் இந்நேரம் காவிரி நீர் கடைமடை பகுதிவரை சென்று இருக்கும் மேலும் சென்னையில் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி ஆகியவை இரண்டும் இணைந்து குளம், ஏரிகள் மற்றும் கால்வாய்கள் என பல்வேறு இடங்களில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் எந்தப் பணி எந்த நிர்வாகம் செய்வது என்பது இதுவரை தெரிவதில்லை புரிவதும் இல்லை"
"எனவே தமிழக முதலமைச்சர், இது சம்பந்தமாக முறையான ஒரு வழிமுறையை கண்டறிந்து பணிகளை ஒதுக்க வேண்டும். மேலும் கடந்த முறை சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் ஆறுகள் மற்றும் குளங்கள் ஏரிகளில் ஏற்பட்டிருந்த அடைப்பு தான் காரணம்."
"கேரளா மழை வெள்ளத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நீர் மேலாண்மை நிர்வாகத்தை சரியாக கையாளுவதோடு, நீர் நிலைகளை பாதுகாக்க நீர் மேலாண்மை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் மேலும் அண்டை மாநிலங்களில் உள்ள நிபுணர்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு குழு அமைக்க வேண்டும்.உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழிசை வலியுறுத்தினார்.