சிலை கடத்தல்... அரசுக்கு அதிகாரம் உண்டு

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தமிழ்நாடு கோவில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இணைப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு கடந்த 1ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்தது.

வழக்குகளை சிபிஐ க்கு மாற்றியதை நியாயப்படுத்தி தமிழக அரசும் பதில்மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், அரசு முடிவுக்கு ஆதரவாகவும், வழக்கில் தங்களையும் இணைக்க கோரியும், தமிழ்நாடு கோவில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழகத்தில் லட்சத்திற்கு மேற்பட்ட சிலைகள் இந்து அறநிலையத்துறை சிறப்பான கண்காணிப்பில் பாதுகாப்போடு உள்ளதாகவும், சிலை திருட்டுக்கள் என்பது இப்போது நடந்தது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஜி பொன் மாணிக்கவேலை சிறந்த அதிகாரி என நீதிமன்றம் பாரட்டியது என்பதற்காக மற்ற அதிகாரிகள் நேர்மையற்றவர்கள் அல்ல என்றும், சிபிஐ விசாரணைக்கு மாற்ற, அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், ஒரு குற்ற செயலை குறிப்பிட்ட அதிகாரி மட்டுமே விசாரிக்கவேண்டும் என்பது மற்ற அதிகாரிகளை குறைத்து மதிப்பீடு செய்வதுபோல் ஆகும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் வரும் 24ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

More News >>