பன்னீர்செல்வம் நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும்... சசிகலா தரப்பு
ஜெயலலிதா மரணம் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று விசாரணை நடந்தது. இதில் பங்கேற்ற பிறகு பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஆணையத்தில் இன்று இரு மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது என்றார்.
"சிசியூ மருத்துவர் செந்தில்குமார் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்தார். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் தனக்கு எதுவும் தெரியாது. ஆகையால் விசாரணைக்காக ஆஜராக வேண்டியதில்லை என மனு தாக்கல் செய்திருந்தார்."
"அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம் உருவாக மூலக் கராணம் குருமூர்த்தி என்பதால் அவர் விசாரிக்கப்பட வேண்டும்" என்ற வாதத்தை முன்வைத்ததாக தெரிவித்தார்.
"வருகிற வியாழன் அன்று (23.08.2018) எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரிக்கப்பட உள்ளனர். 23, 24 ஆகிய தேதிகளில் நாங்கள் குறுக்கு விசாரணை நடத்த உள்ளோம்."
"துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும் . ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டது என அவர்களால் காக்கப்பட்டு வந்த ரகசியம் விரைவில் வெளிவரும்" என சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.