சீனாவில் 25,000 சூதாட்ட செயலிகளை ஆப்பிள் அழித்தது
சீனாவில் பல செயலிகள் (App) தடை செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதும் அவை ஆப்பிள் ஆப்களில் கிடைத்து வந்தன. சீனாவின் செய்தி நிறுவனங்கள் இது குறித்து கண்டனம் தெரிவித்த நிலையில், தடை செய்யப்பட்டுள்ள 25,000 செயலிகளை தனது ஆப் ஸ்டோரிலிருந்து (Apple App Store) அழித்து விட்டதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
"நாங்கள் ஏற்கனவே அநேக செயலிகளை அழித்துள்ளோம். ஆனால், தடை செய்யப்பட்ட செயலிகளை உருவாக்குபவர்கள் எங்கள் ஆப் ஸ்டோர் மூலம் அவற்றை விநியோகிக்க முயற்சித்து வருகிறார்கள். இந்த முயற்சிகளை நாங்கள் விழிப்புடன் தடுத்து வருகிறோம்," என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் ஆப்பிள் செயலி தளம் மூலம் 18 லட்சம் செயலிகள் பகிரப்படுவதாக சீன அரசின் தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட செயலிகள் குறித்த முழு விவரங்கள் மற்றும் எப்போது அவை அழிக்கப்பட்டன என்பது குறித்து திட்டமாக ஆப்பிள் நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால், 25,000 என்பது மொத்த எண்ணிக்கையில் 1.4 சதவீதமாகும்.
அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனம் காலாவதியான மற்றும் ஸ்பேம் செயலிகளை அவ்வப்போது ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கிவிடும். தடைசெய்யப்பட்ட இணையதளங்களை விபிஎன் விபிஎன் என்னும் மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகளை (Virtual Private Networks - VPN) பயன்படுத்தி பார்ப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் சீனாவில் புதிதாக விதிக்கப்பட்ட தடைக்கு ஏற்ப தங்கள் ஆப் ஸ்டோரிலிருந்து 700 விபிஎன்களை கடந்த ஆண்டு அகற்றி விட்டதாகவும் ஆப்பிள் கூறுகிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் உச்சத்தில் இருக்கும் நிலையில் சீன செய்தி நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள கண்டனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.