16 வயதில் தங்கப்பதக்கம் - அசத்திய விவசாயி மகன்
11-ஆம் வகுப்பு மாணவனான சௌரப் சௌத்ரி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்கள் கலந்து கொண்ட விளையாட்டில் முதலிடம் பெற்று அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். இவரது தந்தை ஒரு விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் அபிஷேக் வர்மா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் தீபக் குமார் வெள்ளி வென்றுள்ளார். ஆண்களுக்கான டிராப் பிரிவில் லக்ஷ்யா வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
50 மீட்டர் ரைபிள் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பெண் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த இந்த 37 வயது வீரர், "எனக்கு இனி வேலை கிடைத்துவிடும்," என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான 68 கிலோ ஃபிரீ ஸ்டைல் மல்யுத்தத்தில் திவ்யா காக்ரன் வெண்கலம் வென்றுள்ளார். முன்னதாக, பெண்களுக்கான 50 கிலோ ஃபிரீ ஸ்டைல் மல்யுத்தத்தில் வினேஷ் போகட், தங்கப் பதக்கத்தை தட்டி வந்துள்ளார்.
செபக் டாக்ரோ என்ற போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது. இந்தியாவின் மகளிர் மற்றும் ஆண்கள் கபடி அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.