குப்பை கூளம்... கல்பாக்கம் பக்கிங்ஹாம் கால்வாய்
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் உப்புநீர் கால்வாய் பக்கிங்காம். ஆங்கிலேயர் காலத்தில் நீர்வழி வர்த்தக போக்குவரத்தின் மிக முக்கிய பாதையாக இது திகழ்ந்தது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வரை சுமார் 420 கிலோமீட்டர் இந்த கால்வாய் செல்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் நுழைவுவாயில் பாலத்திற்கு அடியே ஓடும் பக்கிங்காம் கால்வாய், குப்பை கூழமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் கடலுக்குள் செல்ல முடியாத வகையில் செடி, கொடிகள் படர்ந்து கிடக்கிறது.
ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பதால், தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி, அதிக அளவில் உற்பத்தியாகும் கொசுக்களால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படவில்லை என தெரிவித்த அப்பகுதி மக்கள், உடனடியாக பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.