சிறுமி வன்கொடுமை... ஆசிரியருக்கு விநோத தண்டனை
ஆந்திர மாநிலத்தில் 13-வயது மாணவியை வன்கொடுமை செய்த ஆங்கில ஆசிரியரை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
கோதாவரி மாவட்டம் ஏலூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் ராம்பாபு, தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கர்னூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை ஏழு ஆண்டுகளாக பிரிந்துள்ளார்.
இவர் பணிபுரியும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு வீட்டில் சிறப்பு பயிற்சி வகுப்பு எடுத்து வந்துள்ளார் ராம்பாபு. ஆசை வார்த்தைகள் பேசி அந்த சிறுமியை, ராம்பாபு பலமுறை வன்கொடுமை செய்து வந்துள்ளார். சிறுமி கர்ப்பமானதால், அதை கலைக்க ராம்பாபு மாத்திரை வழங்கியுள்ளார்.
இதனை சாப்பிட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிரியரின் இல்லத்திற்கு சென்ற சிறுமியின் உறவினர்கள், ராம்பாபுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் மறுத்த ஆசிரியர், பின்னர் நடந்த விவரங்களை கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள், ஆசிரியரை அடித்து உதைத்து, நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை, ஆசிரியரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.