போலி சான்றிதழ்.. பள்ளிக்கு நீதிமன்றம் கண்டனம்

மாணவிக்கு போலி மாற்று சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் திரவியம் தினேஷ். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு கீர்த்தனா என்ற குழந்தை உள்ளார். தற்போது, சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றும் திரவியம் தினேஷும், அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில், பாலக்காட்டில் உள்ள புனித ரபேல்ஸ் கதீட்ரல் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்த தனது மகள் கீர்த்தனாவை தன்னிடமிருந்து பிரித்து சென்ற மனைவி லட்சுமி, சென்னை நாகல்கேணியில் உள்ள புனித ராணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்ததாக, அந்தப் பள்ளியிலிருந்து போலி மாற்றுச் சான்றிதழ் பெற்று பெங்களூருவில் உள்ள சிலிக்கான் சிட்டி பப்ளிக் ஸ்கூல் எனும் பள்ளியில் குழந்தையை சேர்த்துள்ளார்.

போலி மாற்றுச்சான்று வழங்கிய சென்னை மற்றும் பெங்களூரு பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இ க்கு உத்தரவிட கோரி திரவியம் தினேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், "பள்ளியில் படிக்காத மாணவிக்கு சென்னை பள்ளி போலி மாற்றுச் சான்று வழங்கியதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதால், அந்த பள்ளியை மூட உத்தரவிட வேண்டும்" என்றார்

"ஆனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதுபோன்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.இருப்பினும்,போலி மாற்றுச் சான்றிதழ் வழங்கிய பள்ளியின் அதிகாரியை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்"என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த மோசடிக்கு முக்கிய காரணம் மனுதாரரின் மனைவி லட்சுமி தான் எனக் கூறிய நீதிபதி, அவரது செயல் குழந்தையின் எதிர்காலத்தை வீணடித்து விட்டது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் மாணவி அமைதியான முறையில் தனது படிப்பைத் தொடர அனுமதிக்காத மனுதாரர் செயல்பாட்டுக்கும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

குடும்பப் பிரச்சினை என்பது தம்பதியருக்கிடையே மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.. குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என கூறிய நீதிபதி, குடும்பம் என்பது அன்பும் அரவணைப்பும் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

More News >>