விஞ்ஞான அடிப்படையில் ஊழல் குற்றம் நிரூபிக்கப்படவில்லை: ராமதாஸ்

ஊழல் நடந்தது உண்மை, ஆனால், அந்த ஊழல் குறித்த குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்படவில்லை என்பது தான் தீர்ப்பில் பொருள் ஆகும் என்று 2ஜி தீர்ப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உலகையே அதிரவைத்த 2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 எதிரிகளும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தியாவின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனையின்றி விடுதலை செய்யப்படுவதும், தங்களைத் தாங்களே உத்தமர்களாக சித்தரித்துக் கொள்வதும் அதிர்ச்சியளிக்கிறது.

2ஜி ஊழல் வழக்கை 6 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஓ.பி.சைனி ஒரு வரி தீர்ப்பை மட்டுமே அளித்துள்ளார். முழுமையான தீர்ப்பாணை இன்னும் வெளியாகவில்லை. 2ஜி ஊழல் வழக்கில் 17 எதிரிகள் மீதான குற்றச்சாற்றுகளை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் சி.பி.ஐ. மிக மோசமாகத் தோல்வியடைந்து விட்டதாகவும், ஐயத்தின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு வழங்கி விடுதலை செய்வதாகவும் நீதிபதி ஓ.பி. சைனி அவரது ஒரு வரித் தீர்ப்பில் கூறியிருக்கிறார். அதாவது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்தது உண்மை, ஆனால், அந்த ஊழல் குறித்த குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்படவில்லை என்பது தான் தீர்ப்பில் பொருள் ஆகும்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.44,100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இந்த ஊழல் குறித்த சில ஆவணங்கள் விசாரணை அமைப்புக்கு கிடைக்காமல் தடுக்கப்பட்டதாலும், குற்றஞ்சாற்றுகளை சி.பி.ஐ அமைப்பு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதாலும் தான் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

இத்தீர்ப்பைப் பார்க்கும் போது திமுக மீதான ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்து விசாரித்த நீதிபதி சர்க்காரியா கூறிய கருத்துக்கள் தான் நினைவுக்கு வருகின்றன. திமுக தலைவர்களின் ஊழல் மற்றும் முறைகேடுகள் உண்மை. ஆனால், அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு மிகவும் தந்திரமாக செய்துள்ளனர் என்று சர்க்காரியா ஆணையம் கூறியிருந்தார்.

இப்போதும் அது தான் நடந்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால், அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான அடிப்படையில் செய்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அநீதியும், ஊழலும் இப்போது வென்றிருக்கிறது.

ஆனால், எல்லா நாளும் வெல்ல முடியாது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் டெல்லி தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு, மத்திய புலனாய்வுப் பிரிவும் மேல்முறையீடு செய்து நீதியை நிலை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

More News >>